Monday, September 29, 2014

Arulvakku 29.09.2014

முதல் வாசகம்

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10, 13-14
நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப் பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 

(அல்லது )
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 12: 7-12
விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள் மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. இதன் பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. 
பதிலுரைப் பாடல்
திபா 138: 1-2ய. 2b-3. 4-5 (பல்லவி: 1உ)
பல்லவி: ஆண்டவரே! தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
1 ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்.
2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள்பணிவேன். -பல்லவி
2 உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். -பல்லவி
4 ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்.
5 ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். அல்லேலூயா.
யோவான் 1:47-51
தூய மிக்கேல், கபிரியோல், இரஃபேல்
நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51

அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ``இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்'' என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், ``என்னை உமக்கு எப்படித் தெரியும்?'' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ``பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்'' என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, ``ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்'' என்றார். அதற்கு இயேசு, ``உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்'' என்றார். மேலும் ``வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்று அவரிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
கபடற்றவர்
இயேசு, நத்தனியேலைப்பார்த்து, ”இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று கூறுகிறார். நத்தனியேலுக்கு அது மகிழ்ச்சி கலந்த ஆச்சரியம். ஏனென்றால், உண்மையானவர், கபடற்றவர் என்பது மிகப்பெரிய ஆசீர்வாதமாக விவிலியத்தில் சொல்லப்படுகிறது. ”எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்” (திருப்பாடல் 32: 2). கடவுளின் ஊழியரைப்பற்றி இறைவாக்கினர் எசாயா பேசுகிறபோது, ”வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை: வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை” (எசாயா 53: 9) என்கிறார். ஆக, “கபடற்றவர்” என்கிற வார்த்தை சிறந்த பாராட்டு மொழி.
இயேசு நத்தனியேலை அத்திமரத்தின் கீழ் பார்த்ததாகக்கூறுகிறார். அத்திமரம் என்பது சமாதானத்தைக்குறிக்கும் சொல். 1அரசர்கள் 4: 25 ல் பார்க்கிறோம்: ”யூதா, இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்புடன் வாழ்ந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் திராட்சைத்தோட்டங்களையும், அத்திமரங்களையும் உடைமையாகக்கொண்டிருந்தனர்”. அதேபோல் மீக்கா 4: 4 ல் சொல்லப்படுகிறது, ”அவர்களுள் ஒவ்வொருவரும் தம் திராட்சைத்தோட்டத்தின் நடுவிலும், அத்திமரத்தின் அடியிலும் அமர்ந்திருப்பர். அவர்களை அச்சுறுத்துவார் எவருமில்லை”. இங்கே மேற்சொன்ன இரண்டு இறைவார்த்தைகளும் அத்திமரமும், திராட்சைத்தோட்டமும் சமாதானத்தையும், பாதுகாப்பையும் குறிப்பதாகக்கூறுகிறது. நத்தனியேல் தனக்குள் இஸ்ரயேல் மக்களின் சமாதானத்தை விரும்பினார். மக்கள் அமைதியோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டும் என்பதை எண்ணினார். தனக்குள் இருந்த எண்ணங்களை இயேசு அப்படியே வெளிப்படுத்தியபோது, நத்தனியேல் ஆச்சரியப்பட்டு, மெய்மறந்து நின்றார். இயேசுவை கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்கிறார்.
நாம் எப்போதும் நல்லவற்றையே எண்ண வேண்டும். சமாதானத்தையும், மக்களின் பாதுகாப்பையும் நினைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போது, நாமும் நத்தனியேலைப்போல இறையாசீரைப் பெற்றுக்கொள்வோம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

Sunday, September 28, 2014

Arulvakku 28.09.2014

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28
ஆண்டவர் கூறுவது: `தலைவரின் வழி செம்மையானதாக இல்லை' என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர். பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல் திபா 25: 4-5. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.
4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;
உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்.
ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்;
உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். - பல்லவி
6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்.
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும்,
உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி
8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;
ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும். கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக `இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.அல்லேலூயா.

மத்தேயு 21:28-32
பொதுக்காலம் 26 வாரம் ஞாயிறு
நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32


அக்காலத்தில் இயேசு கூறியது: ``இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் ``மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், ``வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
கடவுளின் உண்மையான மகன்
யூதர்களில் அதிகார வர்க்கத்தினர் கடவுளுக்கு கீழ்ப்படிவதாக சொல்லிக்கொண்டனர். ஆனால், உண்மையில் கீழ்ப்படியவில்லை. பாவிகளும், வரிதண்டுகிறவர்களும் மனம்போன போக்கில் வாழ்ந்தனர். கடவுளைப்பற்றி கவலை கொள்ளாமல் இருந்தனர். ஆனால், இறுதியில் கடவுளிடம் திரும்பி, திருந்தி வந்தனர். இதுதான் இன்றைய நற்செய்தியின் சாராம்சம். இந்த நற்செய்தியில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய உண்மை, இரண்டு பேருமே பாராட்டப்படவில்லை. நடப்பது அப்படியே சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். இரண்டுபேரில் யார் சிறந்தவர்? என்கிற கேள்வி இங்கே எழுப்பப்படவில்லை.
இரண்டு மகன்களுமே தந்தைக்கு திருப்தி தரவில்லை. இரண்டுபேருமே தந்தைக்கு மகிழ்ச்சி தரவில்லை. ஆனால், இரண்டாவது மகன் முதல் மகனைவிட பரவாயில்லை என்கிற தொனியில் நற்செய்தி தரப்படுகிறது. ஒரு தந்தையின் உண்மையான மகன் என்று சொல்லப்படுகிறவர், தந்தையின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதை அப்படியே செய்துமுடிக்கிறவர் தான். அதாவது, தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கையளிப்பது. தனது விருப்பங்களை விடுத்து, தந்தையின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுப்பது. இயேசு உண்மையான மகனுக்கு எடுத்துக்காட்டாகத்திகழ்கிறார்.
நாம் ஒவ்வொருவருமே கடவுளின் பிள்ளைகள். நான் எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன்? என்ற கேள்வியை நாம் நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். கடவுளுக்கு கீழ்ப்படிகிற உண்மையுள்ள மகனாக மாற, முயல்வோம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Saturday, September 27, 2014

Arulvakku 27.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 11: 9 -12: 8

இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே. ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. ``வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே'' என்று நீ சொல்லக் கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை. அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும், வீட்டுக் காவலர் நடுக்கங்கொள்ள, வலியோர் தளர்வுறுமுன்னும், அரைப்போர் மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர் ஒளி இழந்து போகுமுன்னும், தெருச் சந்தடி கேளாவண்ணம் கதவுகள் அடைத்துக் கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர் அனைவரும் ஓய்ந்து போகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும், வெட்டுக்கிளியைப் போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை; வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும், மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பு முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்புமுன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை. வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபைஉரையாளர்; எல்லாமே வீண்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில்
கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. - பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். - பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.



லூக்கா 9:43-45

பொதுக்காலம், வாரம் 25 சனி



நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 43b-45

அக்காலத்தில் இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். அவர் தம் சீடர்களிடம், ``நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்'' என்றார். அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அதை உணர்ந்துகொள்ளாதவாறு அது அவர்களுக்கு மறைவாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.கள்.

-------------------------

புகழுக்கு மயங்காத இயேசு

இதற்கு முந்தைய பகுதியில் இயேசு பேய் பிடித்த சிறுவனின் பிணிதீர்க்கிறார். பேய்களுக்கு எதிராக வல்லமையையும், அதிகாரத்தையும் பெற்று விளங்கியவர் இயேசு கிறிஸ்து. சீடர்களால் விரட்ட முடியவில்லை என்பது இயேசுவுக்கு வருத்தத்தைக்கொடுத்தாலும், தன்னுடைய வெற்றியே, நிச்சயம் சீடர்களுக்கு நம்பிக்கையைத்தரும் என்பதில் திருப்தி அடைகிறார். எனவே, தானே அந்தப் பேயை விரட்டுகிறார்.

பேய்களுக்கு எதிராக இயேசு அதிகாரத்தோடு பேசுவதைப்பார்த்து, மக்கள் வியப்படைகிறார்கள். அவரை மகிமைப்படுத்துகிறார்கள். அவரை மக்கள் புகழத்தொடங்குகிறபோது, இயேசு தன்னுடைய பாடுகளை அறிவிக்கிறார். இயேசு புகழுக்கும், பெயருக்கு மயங்குகிறவர் அல்ல. தன்னுடைய இலக்கில் தெளிவாக இருக்கிறார். அது இயேசுவின் தனி இயல்பு. மக்களின் புகழ்ச்சிக்கு மயங்குவது இயேசுவுக்கு எளிதாக இருந்திருக்கும், சவாலாக இருந்திருக்கும். ஆனால், இயேசு தெளிந்த சிந்தனையோடு இருக்கிறார்.

நமது வாழ்வில் இயேசு தான் நமது தெய்வம் என்ற தெளிந்த சிந்தனையோடு இருக்கிறோமா? அல்லது பணமும், புகழும் நமது மனதை மாற்றக்கூடிய சலன மனநிலையை நாம் பெற்றிருக்கிறோமா? பணத்திற்கும், புகழுக்கும் அஞ்சாத தெளிந்த இயேசுவின் மனநிலையை நாமும் பெறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Friday, September 26, 2014

Arulvakku 26.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 3: 1-11

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் உண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலம் உண்டு: பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்; நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்; கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்துதலுக்கு ஒரு காலம்; இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்; அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்; துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்; கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்; அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்; தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்; காக்க ஒரு காலம். தூக்கியெறிய ஒரு காலம்; கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்; பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்; போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம். வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலைச் சுமையைக் கண்டேன். கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 144: 1,2. 3-4

பல்லவி: என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!

1ய என் பாறையாகிய ஆண்டவர் போற்றி! போற்றி!
2 என் கற்பாறையும் கோட்டையும் அவரே! எனக்குப் பாதுகாப்பாளரும் மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே! -பல்லவி

3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க அவர்கள் யார்?
மானிடரை நீர் கருத்தில் கொள்ள அவர்கள் யார்?
4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;
அவர்களின் வாழ்நாள்கள் மறையும் நிழலுக்கு நிகரானவை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

லூக்கா 9:18-22
பொதுக்காலம், வாரம் 25 வெள்ளிநற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசுவுடனான நம் உறவு
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வு, பேதுருவின் அறிக்கை என்றால் அது மிகையாகாது. இயேசு யெருசலேம் செல்வதற்கு தன்னை தயார்படுத்திவிட்டார்(லூக்கா 9: 51). தான் யெருசலேமுக்குச்சென்று பாடுபடப்போவது இயேசுவுக்கு நன்றாகத்தெரியும். இதற்காகத்தான் இயேசு மண்ணுலகிற்கு வந்திருக்கிறார். ஆனால், தான் பாடுகள்படப்போவதற்கு முன்னதாக, யாராவது தன்னை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறார்களா? என இயேசு அறிய விரும்புகிறார். எனவே அவர் இந்தக்கேள்வியைக்கேட்கிறார்.
பேதுருவின் இந்தப்பதில் இயேசுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையையும் தந்திருக்க வேண்டும். எதற்காக இந்தப்பூமிக்கு வந்திருக்கிறோமோ, அதை தான் நிறைவேற்றுவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது உண்மையில், இயேசுவுக்கு அதிக மகிழ்ச்சி. பேதுரு ஒன்றும் படித்தவரல்ல. சாதாரண, படிக்காத, பாமர மீனவர். உணர்ச்சிகரமானவர். எதையும் உள்ளத்தில் மறைக்காது, வெளிப்படையாகப்பேசுகிறவர். அப்படிப்பட்ட பேதுரு, இயேசுவை சரியாகப்புரிந்து கொண்டிருக்கிறார் என்றால், தான் அவர்களின் மனதில் சிறுநெருப்பை, அணையாத நெருப்பை பற்ற வைப்பதில் வெற்றிபெற்று விட்டேன் என்று இயேசு ஆனந்தம் அடைந்திருக்க வேண்டும். இனி இந்த நெருப்பை யாராலும் அணைக்க முடியாது என்ற நிறைவு அவருக்கு மகிழ்வைத்தந்திருக்கும்.
மற்றவர்களுக்கு இயேசு யார்? என்று கேட்பதைக்காட்டிலும், இயேசு எனக்கு யார்? என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்கும் இயேசுவுக்குமான உறவு என்ன? இயேசுவுக்கு நான் என்ன உறவுமுறை கொண்டிருக்கிறேன்? என்று நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

Thursday, September 25, 2014

Arulvakku 25.09.2014

முதல் வாசகம்

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2-11
வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்; ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது; மறு தலைமுறை தோன்றுகின்றது; உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது. ஞாயிறு தோன்றுகின்றது; ஞாயிறும் மறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது; பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன; எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை; மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன. அனைத்தும் சலிப்பையே தருகின்றன; அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை; எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்; முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை. ஏதேனும் ஒன்றைப் பற்றி, `இதோ, இது புதியது' என்று சொல்லக் கூடுமா? இல்லை. அது ஏற்கெனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை; அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப் பற்றிய நினைவு இருக்கப் போவதில்லை.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 90: 3-4. 5-6. 12-13. 14, 17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன
நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி
14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. அல்லேலூயா. 
லூக்கா 9:7-9
பொதுக்காலம், வாரம் 25 வியாழன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9

அக்காலத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், ``இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்றனர். வேறு சிலர், ``எலியா தோன்றியிருக்கிறார்'' என்றனர். மற்றும் சிலர், ``முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்'' என்றனர். ஏரோது, ``யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!'' என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
-------------------------
இயேசுவே நமது தேடல்
இயேசுவின் சீடர்களுடைய போதனை மக்களின் நடுவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை, ஏரோதுவின் வார்த்தைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஏரோதுவின் குழப்பமான மனநிலை இதை தெளிவுபடுத்துகிறது. இப்படிப்பட்டச்சூழ்நிலையில் ஏரோது இயேசுவைக்காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்ததாக, நற்செய்தியாளர் சொல்கிறார்.
இயேசுவை எதற்காக ஏரோது தேட வேண்டும்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழுவது இயல்பு. அதிசயங்களையும், அற்புதங்களையும் பார்ப்பதற்காகவா? இயேசு இறைவாக்கினர் என்பதால் அவரிடம் ஆசீர் வாங்குவதற்காகவா? அல்லது யோவானின் தலையை வெட்டச்செய்தேன். ஆனால், மீண்டும் அவர் வந்துவிட்டார் என்கிற குற்ற உணர்ச்சியிலா? பயத்திலா? இந்தக்கேள்விகளுக்கு இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். ஏனென்றால், ஏரோதுவின் மனநிலையைப்பார்க்கின்றபோது, நிச்சயமாக இந்த காரணங்களுக்காக, அவர் இயேசுவைப்பார்க்க ஆவல் கொண்டிருக்க மாட்டார். அப்படியென்றால் எதற்காக? எங்கே தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில், இயேசுவை எப்படியாவது வஞ்சித்து கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் இருந்திருக்கும். ஏரோதுவின் தேடல் சுயநலம் மிகுந்த தேடல்.
என் வாழ்க்கையில் இயேசுவை எதற்காக நான் தேடுகிறேன்? எனது சுயநலத்திற்காகவா? அல்லது பொதுநலத்திற்காகவா? அல்லது அன்பினால் உந்தப்பட்டு தேடுகிறேனா? என்னுடைய தேடல் எப்படி இருக்க வேண்டும் என சிந்திப்போம்.
  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்